Musings of Toronto Totadri

தொரொண்தொ தோதாத்ரியின் சிந்தனைகள்-1

அஞ்சிலே ஒன்று

இவரின் சிந்தனைகள் யாவை, எப்படிப்பட்டவை என்று அறிந்து கொள்ளும் முன்னர், இவர் யார் என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழுவது நியாயந்தான். என் மனத்தில் எழும் ஆத்மீகச் சிந்தனைகளுக்குக் காரணமாயிருப்பவர் தான் இவர். எனக்கே தெரியாமல் என்னுடன் கனடாவும் வந்துவிட்டார். ‘என்ன மாமா, பாஸ்போர்ட்டும், விஸாவும் இல்லாமல் வெளிநாட்டுக்கே வந்துட்டேளே?’ என்று கேட்டால், ‘அன்னிக்கு அனநுமார் என்ன இதெல்லாம் வச்சிண்டுதான் கடலைத் தாண்டினாரா? குறுக்க வந்த விஸா ஆபீஸரையே ஒரு போடு போட்டுவிட்டுத்தானே லங்கா பட்டணத்துல நுழைஞ்சார்!’ என்று ஒரே போடாகப் போட்டு புலம்பெயர்ந்து வருபவர்க்கு வக்காலத்து வாங்குவார். தமிழ், சிறிது வடமொழி, ஆங்கிலம் மற்றும் ஆன்மீக கிரந்தங்களில் ஓரளவு பரிச்சயம் உண்டு. தாமறிந்த தத்துவங்களுக்கு இன்றைய நடைமுறையில் நியாயம் கற்பித்து விவாதிப்பார். இவரது இயற்பெயர் எனக்குத் தெரியாது. அவர் தம்மை தோதாத்ரி என்றழைக்கச் சொல்லுவார்.

இப்படித்தான் ஒருநாள், பேரா.பசுபதியாரின் ‘கவிதை இயற்றிக் கலக்கு’ என்ற புத்தகமும் கையுமாக இருந்த என்னிடம், ‘அது என்னடா மோனை, எதுகை என்றெல்லாம் போட்டிருக்கே, அப்படின்னா என்ன?’ என்று வினவினார். ‘ஒண்ணுமில்லை மாமா, முதலெழுத்து ஒத்துப் போயிருந்தா மோனை’ என்று சொன்னேன்.

‘அப்போ, எம் பேரு தோதாத்ரி, To-ன்னு ஆரம்பிக்கறது. இதுக்க ஏற்ற மோனை என்ன?’ அப்படின்னு கேட்டார். நானும், படார்னு, ‘நீங்க இருக்கிற ஊர் To-ல ஆரம்பம். உங்க பேரும் அப்படித்தான். மோனை இருக்கே!’ அப்படின்னு சொன்னேன். அவரும், ‘சரி, எம்பேர் இனிமே ‘தொரொண்தோ தோதாத்ரி’ என்று வச்சுக்கலாம்’ என்று தனக்குத் தானே நாமகரணம் செய்து கொண்டுவிட்டார்.

வாழ்க்கையில் ஏதானும் பிரச்சினை, சிக்கல், குழப்பநிலை என்று எதுவாக இருந்தாலும் பெருமாளை வேண்டிக் கொள்வேனோ இல்லையோ, முதலில் பிரச்சினைக்குத் தீர்வு காண இவரிடம்தான் கேட்பேன். பையனும் பெண்ணும் மேல்நிலைப்பள்ளி படித்துக் கொண்டிருந்த நேரம். எதுக்கெடுத்தாலும் மல்டிபிள் சாய்ஸ் (multiple choice) அமைப்பு வினாக்கள். விடைகளில் எதைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கிறது. எது சரி, எது தவறு என்று தீர்மானிக்க நேரம் ஆகிறது. இப்படிப்போனால், தேர்வின் நேரமே முடிந்து விடும்போல் இருக்கிறதே, எப்படி விடைத்தாளை எழுதி முடிப்பது? என்ற கேள்வி எல்லோர் மனத்திலேயும் எழுந்தது. போறாக்குறைக்கு, மேலுள்ள எல்லாம் சரியே (all of the above), மேலுள்ள எதுவும் சரியன்று (none of the above) என்பது போன்ற குழப்பச் சிகரங்கள்! என் செய்வது? இது மாதிரியான நேரங்களில், ‘தோதாத்ரி சரணம் கச்சாமி’ தான்.

தோதாத்ரியோ மஹா ‘கூல்’ பேர்வழி. இதையெல்லாம் கண்டு அஞ்சமாட்டார். அஞ்சனா நந்தன் ஆஞ்சநேய பக்தர். அதான் முன்னேயே சொன்னேனே, அவர் எப்படி விஸா இல்லாமல் நுழைந்தார் என்று.  எதற்கும் ஒரு சிரிப்பு. ‘அட மடையா, இது கூடவா தெரியாது’ என்பது போல.

‘கம்ப ராமாயணம் படிச்சிருக்கியோடா?’ என்றார். இதற்கும் ராமாயணத்தும் என்ன சம்பந்தம் என்பது போல் என் முகத்தில் ஒரு கேள்விக்குறி ரேகை படர்ந்தது அவருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.

‘நான் உங்கிட்ட அஞ்சு கேள்வி கேட்பேன். புதுப்புது கேள்வி இல்லை. ஒரே கேள்வி. அஞ்சு தடவை கேட்பேன். ஒவ்வொரு கேள்விக்கும் அஞ்சு விடை. அதுல ஒண்ணுதான் சரியான விடை. ஆமாம் அஞ்சுக்கும் அதே அஞ்சு விடையைத்தான் திருப்பித் திருப்பிக் கேட்பேன். ஆனால், முதல் கேள்விக்குச் சரியான விடை இரண்டாவது கேள்விக்கு இல்லை. அடுத்தடுத்து இப்படியே. என்ன புரிகிறதா?’ என்றார். எனக்குத் தலையைச் சுற்றியது. இருந்தாலும், ‘ஸ்வாமி, கேளுங்கோ’ என்றுதான் சொன்னேன்.

அவரும் முதலில் அஞ்சிலே ஒன்று என்று சொன்னார். ‘சரி மாமா, மேலே சொல்லுங்கோ’ என்றேன். அவருக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. ‘அது என்ன சரி மாமா? கேள்வியே அதுதான். இதையே அஞ்சு தடவை எழுதிக்கோ’ என்றார்.

‘என்ன புதிர் வைக்கிறார்?’ என்று கலங்கிப்போய், ‘நீங்களே சொல்லுங்கோ மாமா’ என்று சரண்டர் ஆயிட்டேன்.

‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது’ என்று கேள்விப் பட்டிருக்காயா? என்று கேட்டார். இது என்ன புது குழப்பம்? பிள்ளையாரும், குரங்கும் இங்கே எங்கே வந்தார்கள்? இது என்ன வம்பாப் போச்சு என்று நினைத்து, ‘ஆமாம், மாமா கேட்டிருக்கேன். ஏதானும் பெரிய சங்கல்பம்னு ஒண்ணு எடுத்துண்டா, முதல்லே பிள்ளையாரை வேண்டிக்கொண்டு விக்கினம் இல்லாமல் தொடங்கி, நல்ல படியா முடித்து, ஆஞ்சனேயருக்கு பூஜை செய்து முடிக்கணும்னு பெரியவா சொல்லுவா’ என்றேன். அவரும், ‘அது சரிதான். ஆனால், இந்தக் கம்பர் என்ன செய்தார் தெரியுமோ? ஆரம்பத்திலேயே ஆஞ்சனேயன் காலைப் பிடிச்சுண்டார்’ என்று நிறுத்தினார்.

‘என்ன மாமா, ஏதோ அஞ்சு கேள்வி அப்படி, இப்ப்டின்னு ஆரமிச்சுட்டு இப்போ கம்பர் பத்திப் பேசறேளே?’ என்றேன். ‘அட அபிஷ்டு, கேளு. நானும் அங்கேதான் வந்துண்டிருக்கேன்’ என்று ஆசுவாசப்படுத்தினார்.

‘நம்மக் கம்பர் ராமாயணம் பாடறத்துக்கு முன்னாலே, தியான ஸ்லோகம் எப்படிப் பாடறார்னு சொல்றேன் கேளு’ என்றார்.

அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி

அஞ்சிலே ஒன்(று)ஆறாக ஆரியருக்காக ஏகி

அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

நானும் ஒன்றும் புரியாமல், ‘ஆமாம். இதிலே ஒரே கேள்வி, மல்டிபிள் சாய்ஸ் அது இதுன்னு ஒண்ணும் காணோமே!’ என்று விழித்துக் கொண்டிருந்தேன்.

தோதாத்ரியின் விளக்கம் கீழே.

அஞ்சிலே ஒன்று. இதற்கு ஐம்பூதங்கள் விடையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றுதான் சரியான விடை. இதையே ஐந்து முறை கேட்கிறார் கம்பர். ஒவ்வொரு முறையும் ஒன்றுதான் சரியான விடை.

முதல் வினாவிற்கு விடை: காற்று (வாயு)

இரண்டாவது: சமுத்திரம் (அப்பு)

மூன்றாவது: ஆகாசம்

நான்காவது: பூமி (ப்ருதிவி)

ஐந்தாவது: தீ (தேஜஸ்)

‘இப்பொ சொல்லு; இந்த மாதிரி மல்டிபிள் சாய்ஸ் பரீட்சை இதுவரைக்கும் யாரானும் வைச்சிருக்காளா? இந்த தெய்வத்தை விட வேறு தெய்வத்தை வேண்டிக்கத் தேவையும் இருக்கா. நன்னா யோசிச்சு நீயே ஒங்குழந்தைகளுக்குச் சொல்லு. சொல்லிக்கொடு’ என்று ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார்.

சௌந்தர்